Friday, September 30, 2011

27. தினம் ஒரு மூலிகை இலைக்கள்ளி

27. இலைக்கள்ளி
( தாவரவியல் பெயர் : Euphorbia nivulia Buch-Ham )

கனத்த சதைப் பற்றான நீண்ட இலகளையுடைய முள்ளுள்ள மரம். கள்ளி இனம். இதன் இலை, பால், வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

நீர்மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. வேர் நுண்புழுக் கொல்லும்.

1. இலைச் சாற்றை அல்லது பாலைப் பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

2. இலையை வாட்டிச் சாறு பிழிந்து இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

3. இலைச்சாறு அல்லது பாலை வேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மேற்ப்பூச்சாகத் தேய்த்துவர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை குணமாகும்.

4. இலையை வாட்டிப் பிழிந்து 7, 8 துளிச் சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.

5. வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்று வேளையும் கொடுத்துவர ஈளை, இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

6. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவரக் கக்குவான், சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலை ஆகியவை தீரும்.

7. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளிப்படும்.

8. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம் இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள் உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம் வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும். இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாத புண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள் ஆகியவை தீரும்.

9. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச் சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.


No comments:

Post a Comment