18. ஆல்
(தாவரவியல் பெயர் : Ficus benghalensis)
“ சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை
கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் – நல்வின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்.”
மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையது.
விழுது, பட்டை, இலை ஆகியவை, உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.
1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் இடித்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலை தினமும் குடிக்க மேக எரிச்சல், மேகப்புண், வெள்ளை படுதல் தீரும்.
2. ஆலம் பாலை வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் இவைகளுக்குத் தடவ குணமாகும்.
3. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
4. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து சாப்பிட இரத்த பேதி நிற்கும்.
5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் இடித்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி காலையில் மட்டும், ஒரு குவளை 4 நாட்களுக்கு ஒரு முறை 4 மண்டலம் வரை சாப்பிட (ஒரு மண்டலம் 48 நாட்கள்) மதுமேகம் (சர்க்கரை நோய்) தீரும்.
No comments:
Post a Comment