Saturday, September 17, 2011

தினம் ஒரு மூலிகை (ஆடுதின்னாப் பாளை)


16. ஆடுதின்னாப் பாளை

(தாவரவியல் பெயர் : Aristolochia bracteolata)

"ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு"

மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறுகால வலியை அதிகமாக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.

2. இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக்கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.

3. வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியம் இருக்க (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல், 24 மணிநேரம் தூங்க விடக்கூடாது) மூன்று நாட்களில் எல்லாவிதப் பாம்பு நஞ்சும் தீரும்.

4. வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை நீங்கி சுகப்பேறு ஆகும்.

5. விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.

ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.

இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.

No comments:

Post a Comment