Friday, September 30, 2011

27. தினம் ஒரு மூலிகை இலைக்கள்ளி

27. இலைக்கள்ளி
( தாவரவியல் பெயர் : Euphorbia nivulia Buch-Ham )

கனத்த சதைப் பற்றான நீண்ட இலகளையுடைய முள்ளுள்ள மரம். கள்ளி இனம். இதன் இலை, பால், வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

நீர்மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. வேர் நுண்புழுக் கொல்லும்.

1. இலைச் சாற்றை அல்லது பாலைப் பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

2. இலையை வாட்டிச் சாறு பிழிந்து இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

3. இலைச்சாறு அல்லது பாலை வேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மேற்ப்பூச்சாகத் தேய்த்துவர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை குணமாகும்.

4. இலையை வாட்டிப் பிழிந்து 7, 8 துளிச் சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.

5. வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்று வேளையும் கொடுத்துவர ஈளை, இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

6. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவரக் கக்குவான், சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலை ஆகியவை தீரும்.

7. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளிப்படும்.

8. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம் இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள் உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம் வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும். இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாத புண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள் ஆகியவை தீரும்.

9. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச் சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.


Wednesday, September 28, 2011

24. தினம் ஒரு மூலிகை ( இத்தி )

இத்தி
( தாவரவியல் பெயர் : Ficus virens aiton )

ஆலிலை வடிவில் சிறிய இலைகளை உடைய மரம். சாறு பால் போன்று இருக்கும். இச்சி என்றும் அழைக்கப்படும். மரப்பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மலமிளக்கல், தாதுப் பெருக்கம் ஆகியவை இதன் மருத்துவப் பயன்கள்.

1. 100 கிராம் இத்திக்காயை ஒன்றிரண்டாய் இடத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராக வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டிக் காலையில் சாப்பிட மலம் தாராளமாகப் போகும்.

2. இத்திப் பிஞ்சு 25 கிராம் அதிகாலையில் மென்று தின்ன அதிசாரம், பேதி, கிராணி, உள்ளுறுப்புப் புண்கள் ஆறும்.

3. 100கிராம் இத்திப் பட்டையை ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பாதிப் பாதியாகக் குடிக்க அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

4. இத்திக்காயை நெய்விட்டு வதக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.





தினம் ஒரு மூலிகை ( இண்டு )


23. இண்டு
(தாவரவியல் பெயர் : Acacia pennata)

பீனிசத்தைப் போக்கும் பெருகியதோர் நீரேற்ற
தானசிக்கச் செய்யும் இது சத்தியங்காண்_ வானசைக்கும்
மண்டைக் குடைச்சல் மருவுமுக சன்னியும் போம்
பண்டையுற்ற இண்டினுக்குப் பார்.

சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூரியமுட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கோடி. இலை, தண்டு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

கோழையகற்றுதல், நாடி நடையையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.

1. இண்டந்தண்டை சிறு துண்டாக நறுக்கி ஒரு புறம வாயினால் ஊத மறுபுறம் சாறு வரும். அந்த சாறு 15 மி.லி. யில் திப்பிளிப் பொடி, பொரித்த வெங்காரம் வகைக்கு ஒரு கிராம் சேர்த்துக் காலை மட்டும் 3 நாட்கள் கொடுத்தால் ஈளை, இருமல் குணமாகும்.

2. மேற்சொன்ன மருந்தை 1 தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, மாந்தம் தீரும்.

3. இண்டங்கொடிச் சமூலம், தூதுவளை, கண்டங்கத்தரி வகைக்கு ஒரு பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வர இரைப் பிருமல் தீரும். குழந்தைகளுக்கு 25 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.

4. இண்டம் வேர், தூதுவளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும்.

5. இண்டம் இலை, சங்கிலி, தூதுவளை இலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.








Monday, September 26, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆகாயத் தாமரை )

22. ஆகாயத் தாமரை
( தாவரவியல் பெயர் : Pistia stratiotes )

நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலைகளே மருத்துவப் பயனுடையவை.

வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப் புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட விரைவில் புண் ஆறும். ஆசன வாயில் வைத்துக் கட்டினால் வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.

2. 25 மி. லி. இலைச் சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் தொடர்ந்து கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

3. இலைச்சாறு அரைலிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர் ஆகியவற்றைக் கலந்து இளம் தீயில் காய்ச்சி, மெழுகுப் பதத்தில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி ஆகியவற்றை வகைக்குப் பத்து கிராம் வீதம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும். (இத ஆகாயத் தாமரைத் தைலம் ஆகும்.)

4. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை பத்து நிமிடம் ஆசனவாயில் காட்ட மூல முளை விழும்.









Thursday, September 22, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆகாச கருடன் )


21. ஆகாச கருடன்

(தாவரவியல் பெயர் : Corallocarpus epigaeus)

அரையாப்பு வெள்ளையகலாக் கொறுக்கை
கரையாத கட்டி இவை காணார் வரையில்
திருடரெனச் செல்லும் விடம்சேர் பாம்பும் அஞ்சும்
கருடன் கிழங்கதனைக் கண்டு.

கோவையினத்தைச் சேர்ந்த பெருங்கிழங்கு உடைய ஏறு கொடி. கசப்புச் சுவையுள்ள கிழங்கே மிகவும் மருத்துவப் பயனுடையது. உடல் தேற்றவும், உடல் பலம் அதிகரிக்கவும் மருந்தாகும்.

1. சுண்டைக்காயளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் கடி விஷமும், அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.

2. கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாக அரைத்து 50 மி.லி. தண்ணீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்ப்பூச்சாகவும் பூசி வர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும்.

3. கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து, ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு, உப்பு, புளி நீக்கி சாப்பிட பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

4. 5 கிராம் கிழங்குப் பொடிய 100 மி.லி தண்ணீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட சீத பேதி தீரும்.

5. 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கீழ வாதத்துக்கு பத்துப்போட குணமாகும்.

Saturday, September 17, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆனை நெருஞ்சில் )

20. ஆனை நெருஞ்சில்

(தாவரவியல் பெயர் : Pedalium murex)

நல்ல நெரிஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை

வல்ல சுரம் அனலை மாற்றும் காண் _மெல்லியலே

மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்

கூனுறு மெய் வாதமும் போக்கும்.

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப்பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல், வெப்பு தணித்தல், குளிர்ச்சி தரல், உடல் உரமாக்கல், காமம் பெருக்கல், மாதவிலக்கு சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிளிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனை நாள்தோறும் காலையில் பருகிவர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.

2. 10 கிராம் இலைப் பொடியை பாலில் சர்க்கரை சேர்த்துப் பருகிவர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.

3. 50 கிராம் இலையை மென்மையாக அரைத்துத் தயிருடன் நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை, நீர் எரிச்சல், உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.

4. 20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலையாகச் சாப்பிட நீர்சுருக்கு தீரும் விந்தணுக்கள் பெருகி ஆண் மலடு நீங்கும்.

5. இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

தினம் ஒரு மூலிகை (ஆவாரை)

19. ஆவாரை

(தாவரவியல் பெயர் : Cassia auriculata)

பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயனுடையது.

சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல்படும்.

1. பூச்சூரணத்தையோ, பூவையோக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும பயன்படுத்த மேகவெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். தேகம் பொன்னிறமாகும்.

2. 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை,மாலை குடித்துவர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

3. ஆவாரம்பூ 100 கிராம் எடுத்து 3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளராகக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, பெரும்பாடு, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும்.

4. ஆவாரம்பூவைவதக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து யோனியினைக் கழுவ கருப்பை புண், எரிச்சல் தீரும்.

5. ஆவாரம்பூ வேர்ப்பட்டை, சீந்தில் வேர், கொன்றைப் பூ சம அளவில் எடுத்து நீரிலிட்டு எட்டில் ஒன்றாய்க் காய்ச்சிக் குடிக்க நீரிழிவு தீரும்.

6. ஆவாரம்பூவை நன்றாக அரைத்து அதன் சாற்றை கண்ணில் விட சீழ் பிடிக்கும் கண்நோய் தீரும்.

7. ஆவாரம்பூ, இலை சமஅளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து விளக்கெண்ணெயில் வதக்கி சூட்டுடன் வீக்கம், கட்டி இவற்றில் வைத்துக் கட்ட கட்டி கரையும்.

தினம் ஒரு மூலிகை ( ஆல்)

18. ஆல்


(தாவரவியல் பெயர் : Ficus benghalensis)

சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை

கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் நல்வின்

பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்

மேலும் இலையுமென விள்.

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையது.

விழுது, பட்டை, இலை ஆகியவை, உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.

1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் இடித்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலை தினமும் குடிக்க மேக எரிச்சல், மேகப்புண், வெள்ளை படுதல் தீரும்.

2. ஆலம் பாலை வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் இவைகளுக்குத் தடவ குணமாகும்.

3. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.

4. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து சாப்பிட இரத்த பேதி நிற்கும்.

5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் இடித்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி காலையில் மட்டும், ஒரு குவளை 4 நாட்களுக்கு ஒரு முறை 4 மண்டலம் வரை சாப்பிட (ஒரு மண்டலம் 48 நாட்கள்) மதுமேகம் (சர்க்கரை நோய்) தீரும்.

தினம் ஒரு மூலிகை ( ஆமணக்கு)

17. ஆமணக்கு

(தாவரவியல் பெயர் : Ricinus communis)

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண்பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை முத்து எனப்படும். இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) மலமிளக்கும். தாது வெப்பகற்றும்.

1. இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டிவர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் அளவு காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஓரிரு துளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

7. தோல் நீக்கிய விதையை மெழுகுபோல் அரைத்துப் பற்றுப் போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும், மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுப் போட பல்வலி நீங்கும்.