Monday, September 5, 2011

தினம் ஒரு மூலிகை ( அம்மான் பச்சரிசி )


8. அம்மான் பச்சரிசி

( தாவரவியல் பெயர்: Euphorbia hirta)

"காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்

சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்

ஓருமம்மான் பச்சரிசிக் குன்ம இனத்துடனே

கூருமம் மா னொத்த கண்ணாய் கூறு"


ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி. எதிரடுக்கில் கூர் நுனிப் பற்களுடைய, ஈட்டி வடிவ இலைகளையுடையது.

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், வெப்புத் தணிப்பானாகவும், வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும்.

1. இலையைச் சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் தீரும்.

2. தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத் தாது, உடல் பலப்படும்.

3. கீழா நெல்லியுடன் சமஅளவு இலை சேர்த்து காலை, மதியம் இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.

4. பாலைத்தடவி வர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

5. இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்துப் பசும்பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுக்கச் சிறுநீருடன் இரத்தம் போதல், நீர்க்கடுப்பு, மலக்கட்டு, உடல் நமைச்சல்ஆகியவை தீரும்.

6. பூக்களை சுத்தம் செய்து பசும்பால் விட்டு, அரைத்து பசும்பாலில் ஒருவாரம் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.

7. அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் கொடுக்க வெள்ளைப்படுதல் குணமாகும்.

சித்திரப்பாலாடை என்று இதற்கு வேறு பெயரும் உண்டு.

1 comment:

  1. பயனுள்ள தகவல்கள். வயிற்று வலிக்கு நெல்லிக்காய் அளவு சாப்பிட அரை மணி நேரத்தில் குணமாகிறது.

    ReplyDelete