என் வாழ்வு உன்னுடையது…..
நினைத்த போதெல்லாம்
வருவதில்லை மழை….
என்றாலும் பொழிகிறபோது
மறுக்கவா முடிகிறது…..
அப்படிதான் ஏற்றுக் கொள்ளப்
படுகிறது உனது வருகையும்….
எப்பொழுதும் நீயொரு மழைதான்
நினைத்த போது வராததில் மட்டுமல்ல…
ஒவ்வொரு முறையும் ஒரு
பூந்தூரலாய்ப் பொழிவாய்…
சாரலாய் மாறி
சடசடவென்று அடிப்பாய்…..
உற்சாகம் பொங்க வானத்திற்கும்
பூமிக்குமாய் நிறைவாய்….
குளிரக்குளிரக் கொட்டுவாய்
சிறிது நேரத்தில் எல்லாம் ஓய்ந்து
அமைதியும் குளிர்ச்சியும் மட்டுமே….
உனது புரிதல் அற்புதமானது…
உனது அன்பு இதமானது…
மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது – போல்
எல்லாமே மறந்து
போகிறதுன் முன்னால்…
நீ எழுந்து போன பின்னால் – கூட
எதுவும் சிந்திக்க
முடிவதில்லை என்னால்….
அப்படியென்ன வசீகரம் உன்னிடம்…
எனது சந்தோசங்களையும், துயரங்களையும்
பயங்களையும், பாதிப்புகளையும்
தூக்கிக் கொண்டு உன்னிடம் தானே
ஓடி வருகிறேன்….
என் கசப்புகளை
நீதான் விழுங்க வேண்டியிருக்கிறது…
என் காயங்களுக்கு
நீதான் அழவேண்டியிருக்கிறது…
என் சந்தோசங்களை மட்டும்
எனக்கே கொடுத்து விடுகிறாய்…
எத்தனையோ நாட்களின்
பிடிவாதத்தையும் உறுதியையும்
ஒன்றுமேயில்லாமல் செய்துவிடுகிறதுன்
ஒரே ஒரு சொல்….
என் வாழ்வில் எவ்வளவு
மகத்தான மாற்றங்களை
ஏற்படுத்தி விட்டாய்…..
துயரங்களடியில் புதைக்கப்பட்ட
ஒரு மனதை மீட்டெடுத்திருக்கிறாய்….
ஏமாற்றத்திலும் வேதனையிலும்
இருளடைந்து கிடந்த என் வாழ்வில்
தீபங்கள் ஏற்றியதுன் அன்பு…..
உன் நேசத்தின் நிழலில் தான்
எப்போதும் என் இளைப்பாறல்….
இப்படிச் சொல்வதற்கு
எத்தனையோ இருக்கிறது….
ஒரே வரியில் சொல்வதென்றால்
என் வாழ்வு உன்னுடையது…..