விதை நெல்....

விதை நெல்....

பருவ மழை                      
பெய்யுமின்னு
பகலிரவா பாத்திருந்து
பக்குவமா எடுத்துவச்ச
வெத நெல்ல  
பதறாம தெளிச்சு விட்டு

மொள விட்ட பயிற
பாத்திகட்டி நட்டு வச்சு
மடையடைச்சு
உரம்போட்டு
களை நீக்கி,

வெளஞ்ச நெல்ல
ஆடு, மாடு
மேஞ்சறாம
காவல் காத்துக்
கண்ணசந்த நேரத்துல

நெல்ல வித்த காசுல
தலப் பிரசவத்துக்கு
வந்த மக மனசு கோணாம
சிறப்பா
சீர் செஞ்சு மறுவீடு
அனுப்பி....

பட்டணத்துல படிச்சபய
பதுவிசா போயி வர
புதுசா வந்த வண்டி
வாங்கிக் குடுத்து
வாயடைச்சு...

காலமெல்லாம்
கட்டுப்பட்ட பொஞ்சாதிக்கு
கழுத்துச் சங்கிலி
மாத்திப் போட்டு
அழகு பாத்து...

பட்டுன்னு விழுந்த
ஒத்தத் துளியில
பதறி எழுந்து பையநடந்து
வீட்டுக்கு வாரதுக்குள்ள
வெரசா வந்துருச்சு மழையும்

வெளிய வர வகையில்லாம
டிவியப் போட்டா
தானேன்னு சொல்லி
தலையில இடியா
எறங்குச்சு செய்தி...

அடுத்தவார அறுவடைக்காக
ஆளான பயிரெல்லாம்
கழுத்தளவு தண்ணியில – நான்
கண்ட கனவெல்லாம்
கதிகலங்கி நிக்குதே

வெதநெல்லுக்குக் கூட
வழியில்லாம...
குதிருக்குப் போகாமலே
ஊறிப் போச்சே...

பொங்கித்தின்ன வழியில்ல
பொங்கலுக்கு என்ன செய்ய?
பேஞ்சு கெடுத்துருச்சே
பெருமாளே என்ன செய்ய?