Monday, September 5, 2011

தினம் ஒரு மூலிகை ( அமுக்குரா )


7. அமுக்குரா

( தாவரவியல் பெயர்: Withania somnifera)

கொஞ்சம் துவர்ப்பாம் கொடிய சுயம் சூலை அரி

மிஞ்சு கரப்பான் பாண்டு வெப்பதப்பு விஞ்சி

முசுவுறு தோடமும்போம் மோகம் அனலுண்டாம்

அசுவந்திக்கென்றறி.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறு கிளைகளையும் உடைய ஐந்தடி வரை வளரக்கூடிய குறுஞ்செடி வகை. கிழங்கே மருத்துவப் பயனுடையது. இது ஆயுர்வேதத்தில் அசுவகந்தி என்றழைக்கப் படுகிறது. அசுவகந்தி லேகியம், அசுவகந்தி தைலம் பெரும்பாலோருக்கு அறிமுகமானதே.

நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், பித்தநீர் பெருக்கியாகவும், குடல் தாது வெப்பகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், காமம் பெருக்கியகவும் செயற்படும்.

1. இலையை மென்மையாக அரைத்துப் பற்றுப் போட கட்டி, எரி கரப்பான், பாலியல் நோய்ப் புண் ஆகியவை தீரும்.

2. 2 கிராம் உலர்ந்த கிழங்குப்பொடி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல்,உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.

3. இலை, வேர் ஆகியவை சம அளவு எடுத்து அரைத்துப் பற்றுப் போட அரச பிளவை, ஆறாத புண்கள், மூட்டு வீக்கம் ஆகியவை தீரும்.

4. காயை அரைத்துப் படர் தாமரையில் தடவி வர படர்தாமரை மறையும்.

5. சூரணத்தைப் பாலில் கலந்து வீக்கம், படுக்கைப்புண் ஆகியவற்றிற்குப் பூச புண் ஆறும்.

6. அமுக்குரா சூரணம் 10 கிராம், கசகசா 30 கிராம், பாதாம் பருப்பு 10 கிராம், சாரப்பருப்பு 5 கிராம், பிச்தாப்பருப்பு 5 கிராம் ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாட்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம்.

No comments:

Post a Comment