Saturday, September 17, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆனை நெருஞ்சில் )

20. ஆனை நெருஞ்சில்

(தாவரவியல் பெயர் : Pedalium murex)

நல்ல நெரிஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை

வல்ல சுரம் அனலை மாற்றும் காண் _மெல்லியலே

மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்

கூனுறு மெய் வாதமும் போக்கும்.

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப்பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல், வெப்பு தணித்தல், குளிர்ச்சி தரல், உடல் உரமாக்கல், காமம் பெருக்கல், மாதவிலக்கு சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிளிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனை நாள்தோறும் காலையில் பருகிவர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.

2. 10 கிராம் இலைப் பொடியை பாலில் சர்க்கரை சேர்த்துப் பருகிவர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.

3. 50 கிராம் இலையை மென்மையாக அரைத்துத் தயிருடன் நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை, நீர் எரிச்சல், உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.

4. 20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலையாகச் சாப்பிட நீர்சுருக்கு தீரும் விந்தணுக்கள் பெருகி ஆண் மலடு நீங்கும்.

5. இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

3 comments:

  1. இப்பத்தான்... அப்பாடிக்கா.. வந்தாப்ப... உங்க நியாயபகம் வந்தது.. சரின்னு எட்டிப்பார்த்தா!! சூப்பராக டெம்ளேட்டை மாற்றியுள்ளீர்கள்.

    உங்கள் வலைப்பூவும் நல்ல நல்ல தாவர மருத்துவக் குறிப்புகள் கொடுப்பதால், நல்ல வரவேற்பை பெறும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆரோக்கியமே மனித வாழ்வில் மிக முக்கியமானது.
    ஆரோக்கியமாக வாழ கற்று கொள்வது ஒரு கலை.
    நம் தமிழ் கலாசாரம் மூலிகை களோடு பிண்ணி பிணைந்துள்ளது.
    நம் முன்னோர்களாலும், சித்தர்களாலும் நமக்கு வழங்கப்பட்ட அறிய பல மூலிகை மருத்துவத்தை பற்றி தினம் ஒரு மூலிகை கட்டுரை மூலம் ,அறிய தரும் சித்தா மருத்துவர். திருமதி. சுமையா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நன்றி நண்பர்களே...உங்களைப் போன்றோர் வாசித்து வாழ்த்துவதே என்னைப் போன்றவர்களுக்கு ஊக்கமும், மேலும் நல்ல ஆக்கங்களுக்கும் வழி வகுக்கும்.

    ReplyDelete