Thursday, August 11, 2011

தமிழ் மருத்துவம்

மனிதனுக்கு தீவினைக்கேற்ப ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கென அவன் வாழும் நாட்டிலும், காட்டிலும் எண்ணற்ற மூலிகைகளையும் - தாதுப்பொருட்களையும் - உயிரினங்களையும் தோற்றுவித்த இயற்கையன்னை,அவற்றினைக் கையாண்டு பிணி நீங்கிப்பெருவாழ்வு பெறும்
வழிமுறைகளையும் வகுத்துள்ளதையே "மருத்துவம்" என்று கூறுகின்றோம் .

மருத்துவ முறைகளில் இன்று சித்த மருத்துவத்தோடு ஆயுர்வேதம், யூனானி,ரோமர் வைத்தியம், கிரேக்க மருத்துவம், அலோபதி, ஓமியோபதி, பயோ கெமிஸ்ட்ரி, நேச்சுரோபதி, அக்குபஞ்சர் என்ற பல்வேறு வகையான வைத்திய
முறைகளும் நிலவி வந்தாலும், இவையனைத்திலும் முதலில் தோன்றியதும், எக்காலத்திற்கும் ஏற்றவண்ணம் அறுதியிட்டுக் கூறியுள்ளதும், வாழ்க்கை முறையை ஒட்டியதும், தத்துவார்த்த விஞ்ஞானப் பூர்வமானதும், என்றும் அழியாததுமாகிய "தமிழ் மருத்துவமே" மிக்க மேன்மையுடையது என்பதில் அறிவுடையோர்க்கு ஐயமிராது.

உலகிலிருக்கும் வைத்திய முறைகளிலேயே மிகவும் தொன்மைவாய்ந்த இந்த தமிழ் மருத்துவம் முதற் சங்க காலத்திற்கு முன்னரே தோன்றியதெனவும் நம்பப் படுகிறது. ஆரியர்கள் படையெடுத்து இந்தியாவில் குடியேறும் முன்பே, அதாவது 27000 ஆண்டுகளுக்கு முன்னரே நாடெங்கும் இம்மருத்துவம் பரவியிருந்தது எனவும் கூறுகின்றனர்.(இந்த சித்த மருத்துவம் ஆரியர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட வைத்திய முறை என்ற தவறான கருத்து நிலவுவதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்)

மூலிகை சம்மந்தப்பட்டதுன்னு சொல்லிட்டு இதுவரைக்கும் ஒரு மூலிகை வாசம் கூட வரலையேன்னு நெனக்காதீங்க... இதோ வந்துட்டேன் ..

சரி இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி.. என்னடா கேள்வி கேக்கபோராங்களே படிச்சதெல்லாம் நெனப்புல இல்லையேன்னு என்ன கேள்வியாக இருக்கும்னு மண்டையப் பிச்சுக்காதிங்க

இப்போ இதப் படிக்கிற ஒவ்வொருத்தர் வீட்டுலயும் யாருக்காவது ஒரு நோய் கூட இல்லேன்னு சொல்ல முடியுமா? எங்க குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்னு மார்தட்டிக்கிக்கிற நிலைல இல்லேங்க

வீட்டுல ஒருத்தருக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம், மூட்டுவலி,உடல்பருமன், மூச்சு வாங்குதல்னு (இளைப்பு நோய் ) இப்படி ஏதாவது ஒண்ணு இருந்துட்டு தானே இருக்கு?

நம்ம தாத்தா பாட்டிக்கு இந்த வியாதிலாம் என்னன்னே தெரியாது....
ஏன்னா அவுங்கள இதெல்லாம் பாதிக்கல, அவுங்க காலைல எழுந்ததும் பழங்கஞ்சிய குடிச்சிட்டு வயக்காட்டுக்கு நடந்து போயி களை பறிச்சு, நாத்துநட்டு,
தண்ணி அடைச்சு (மடை திருப்பி) அப்படியே அங்க இருந்து நாலு காய்கறிய பறிச்சிட்டு வீட்டுக்குவந்து சோறு வடிச்சு, அம்மில அரைச்சு கொளம்பு வச்சு ......

ஸ்ஸ்ஸ்.... அப்பாடா நெனச்சா நமக்கே தலைய சுத்துதுப்ப்பா....

இவ்வளவு வேலையையும் இயந்திரங்களின் துணை இல்லாமல் செய்து, சுத்தமான காற்றையும் சுகாதாரமான இயற்கை உணவுகளையும் தெளிந்த நீர் ஆதாரங்களையும் பெற்று ஆரோக்கியமான அழகான வாழ்கையை வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்று நமது உணவுப்பழக்க வழக்கங்களை சிறிது யோசிச்சு பாருங்க
நம்ம உடலுக்கு தேவையான அடிப்படையான ஏழு சத்துக்களை சரியா நாம எடுத்துக்கறோமா...?

அது என்ன ஏழு சத்து பாக்கலாமா?

1. மாவுச்சத்து
2. கொழுப்புச்சத்து
3. நீர் சத்து
4. நார் சத்து
5. புரத சத்து
6. வைட்டமின்(உயிர் சத்து)
7. மினரல்ஸ் (தாதுச்சத்து)

மேலே சொன்ன ஏழு சத்துக்களில் நாம் அதிக அளவில் தவிர்க்க வேண்டிய சத்துக்களாகிய "மாவு" மற்றும்" கொழுப்புச் சத்துக்களையே" நம் அன்றாட உணவில் அதிக அளவில் எடுத்துக்கொள்கிறோம்.

உதாரணமாக பணிக்குச் செல்லும் பெண்களை எடுத்துக்கொண்டால் காலையில் அவசர அவசரமாக வீட்டில் இருப்பவர்களுக்கும், பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கும் மாவுச்சத்து அதிகம் மிகுந்த இட்லி, தோசை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு வகைகளாகிய நூடுல்ஸ், மக்ரோனி,பாஸ்தாஸ் போன்ற உணவுகளையே அதிக அளவு தயாரிக்கிறார்கள்.

மதியம் வடிக்கப்படாத சாதம் (குக்கர் சாதம்) மற்றும் எண்ணையில் பொரிக்கப்பட்ட கிழங்கு, காய்கள் போன்றவற்றை தயாரித்து வைத்து விடுகிறார்கள்...

மாலையில் பணியிலிருந்து திரும்பும்போதே மாவு பைகளோடு தான் வருகிறார்கள்...(இந்த மாவு கிடைக்க வில்லையென்றால் அவர்கள் படும்பாடு இருக்கிறதே.... அப்பப்பா...)
வீடு திரும்பிய உடனே குழந்தைகளுக்கு சுமார் நான்கே நான்கு கரண்டி எண்ணை விட்டு தோசை ஊத்திக்கொடுப்பாங்க பாருங்க அப்புறம் கொழுப்பு நிறைந்த தேங்காய் சட்னி, மசால் தோசை, பூரி போன்ற மாவு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளையே அதிக அளவு எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

ஆனால் நார்ச்சத்து, தாதுச்சத்து நிறைந்த உணவு வகைகளாகிய கேழ்வரகு, கம்பு, சோளம் இவையெல்லாம் நம் முன்னோர்களோடே மறைந்துவிட்டது...
நாமும் மறந்துவிட்டோம்.. நமக்கும் யோசிக்க நேரமில்லை....
அப்படி மறந்துவிட்ட நம் உணவு வகைகளையும், அதனால் ஏற்படும் நோய்களையும் அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்
கொள்வதை பற்றியும் கடவுள் இந்த உலகில் படைத்த படைப்புகளில் அழகிய அற்புத படைப்பாகிய நம் உடலை பராமரிப்பது பற்றிய விரிவான தகவலையும் இனி வரும் நாட்களில் பாப்போம்......

1 comment: