Sunday, August 21, 2011

கற்பக மூலிகை...

கடந்த பதிவில் கூறியது போல நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, சோளம், பயறுவகைகள், கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களில் மா, பலா, வாழை, நெல்லிக்கனி, நாவற்பழம், எலுமிச்சை போன்றவைகளை அதிக அளவிலும், அரிசி உணவு வகைகளைக் குறைவாகவுமே பயன்படுத்தினர். அப்படிப்பயன் படுத்தியதால் உடலுக்குத் தேவையானச் சத்துக்கள் சரிவிகித சமஅளவில் கிடைத்தது. நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர்...

ஆனால் இன்றோ நாம் கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றின் பயன் தெரிந்தும் பயன்படுத்தத் தெரியாததால் அவற்றை நாம் ஒதுக்கி விடுகிறோம். மேலும் இவையனைத்தும் இன்று நம் உபயோகத்திற்கு ஏதுவாக மாவாகவும், குருணையாகவும் எளிதில் கிடைக்கிறது.

பயறுவகைகளான நிலக்கடலை, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, கொள்ளு, மொச்சை, காராமணி, உளுந்து, எள் மற்றும் பருப்புவகைகள் ஆகியவற்றையும் கீரையில் அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மணித்தக்காளி, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தூதுவளைக்கீரை மற்றும் காய்கறிகளில் சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவையே முக்கியப்பங்கு வகித்தது.....

முதற்பகுதியில் சொன்ன ஏழு வகையான சத்துக்களும் இவற்றில் அடங்குகிறது.
இப்படி சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்ட மூலிகைகளில்
முதலாவதாக திருமூலரின் 45 கற்பக மூலிகைகளைப் பார்ப்போம். பிறகு ஒவ்வொரு மூலிகைகளையும் அதன் மருத்துவ குணங்களோடு வரும் பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம்.

· கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
· காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
· கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
· ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
· "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தக ற்றாழை 19 செஞ்சித்திர மூலம்
· நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
· பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
· 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
· "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
· கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
· கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அழுகண்ணி
கெடியான 37 பொன்னூமத்தை 38 மதுர கோவை
· படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
· "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
· 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
· பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
· துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
· "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
· மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
· எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
· அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளபவர்களிற்கு மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும், முடி நரைக்காது, தோல் சுருங்காது, உடல் மூப்பு அடையாது மலைகளில் எளிதாக ஏறலாம். மூச்சு இரைக்காது.

1 comment:

  1. மூலிகைகளின் குணம் அதன் பயன் பற்றி நம் முன்னோர்கள் எவ்வளவோ சொல்லியும அறிவுருத்தியும் உள்ளார்கள் ஆனால் அதன் பயனை இன்றைய தலைமுரையினருக்கு எடுத்து கூற தகுந்த அதாவது விவரம் தெரிந்தவர்கள் மிக குறைந்து விட்டார்கள் உங்களை போன்றோர்கள் இது போல எடுத்துரைக்க முன் வந்தமைக்கு நன்றிகள் இந்த இணைய தளம் அதற்க்கு வழி வகுத்து பயனளிக்கும் என நம்புகிறேன் உங்கள் முயற்ச்சிக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete