Wednesday, November 23, 2011

38. தினம் ஒரு மூலிகை ஓமம்...


(தாவரவியல் பெயர் : Carum copticum Benth & Hooke)

சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம் ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல்.

நேராக வளரும் விதைகளுக்காகப் பயிரிடப் படும் சிறு செடியினம். விதைகளே மருத்துவப் பயனுடையவை. பசித் தூண்டுதல், வயிற்று வாயுவகற்றல், இசிவகற்றல், அழுகலகற்றல், உடல் வெப்பமிகுத்தல், உமிழ்நீர் பெருக்கல், உடலுரமாக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.

1. தூய்மையான ஓமத்தை வறுத்துப் பொடித்து ஒரு கிராம் அளவுக்கு நீருடன் கொள்ளப் பசியைத் தூண்டும். வயிற்று வாயு தீரும்.

2. ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களிபோலக் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப் போடக் குணமாகும்.

3. ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து இடித்துப் பொடித்து, அத்துடன் சமஅளவு சர்க்கரைப் பொடி சேர்த்து, அரைத்த தேக்கரண்டியாகக் காலை, மாலை கொடுத்துவரச் செரியாமை, கடும் வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

4. ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை, கசகசாத் தொல் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி வடித்து 15 மி.லி.யாகக் காலை, மாலை கொடுத்து வர இரைப்பிருமலில் நெஞ்சுச் சளி கரையும்.

1 comment:

  1. சித்த மருத்துவ நோக்கில் பொருட்களைக் காட்டியுள்ளது வெகு சிறப்பு !

    ReplyDelete