Wednesday, November 23, 2011

40. தினம் ஒரு மூலிகை ஓரிதழ் தாமரை.

( தாவரவியல் பெயர் : Hybanthus enneaspermus )

ஓரிதழ்த் தாமரையின் உற்ற குணத்தைக் கேளாய்

மார்பில் இல்லாத மங்கையர்க்கு மோரில்

குடிக்கப்பால் உண்டாகும் கோர மேகத்தை

படிக்குள் இருக்கா தொழிக்கும் பார்.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களையும் உடைய குறுஞ்செடி. செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

தாது வெப்பகற்றியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

1. இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று, பால் அருந்திவர ஒரு மண்டலத்தில் (48 நாட்களில்) தாது இழப்பு, அதிமூத்திரம்,வெள்ளை, வெட்டைச்சூடு, நீர் எரிச்சல், சிற்றின்பப் பலவீனம் ஆகியவை தீரும்.

2. ஓரிதழ் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் ஒரு பிடி அளவு அரைத்து 200 மி.லி. எருமைத் தயிரில் 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை ரணம், வெள்ளை ஆகியவை தீரும். ( மருந்து சாப்பிட்ட பின் காரமும், சூடும் இல்லாத உணவு சாப்பிட வேண்டும்.)


39. தினம் ஒரு மூலிகை ஓமவல்லி.

(தாவரவியல் பெயர் : Coleus aromaticus Benth)

"காச இருமல் கதித்தம சூரியயையம்

பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் - வீசுசுரங்

கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்

கற்பூர வள்ளிதனைக் கண்டு."

சதைப் பற்றுள்ள, மணமுள்ள எதிரடுக்கில் அமைந்த இலகளையுடைய குறுஞ்செடியினம். இலையே மருத்துவப் பயனுடையது.

வியர்வைப் பெருக்கியாகவும், கோழை அகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் செயல்படும்.

1. இலைச்சாற்றைச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கச் சீதள இருமல் தீரும்.

2. இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

3. இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும்.



38. தினம் ஒரு மூலிகை ஓமம்...


(தாவரவியல் பெயர் : Carum copticum Benth & Hooke)

சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம் ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல்.

நேராக வளரும் விதைகளுக்காகப் பயிரிடப் படும் சிறு செடியினம். விதைகளே மருத்துவப் பயனுடையவை. பசித் தூண்டுதல், வயிற்று வாயுவகற்றல், இசிவகற்றல், அழுகலகற்றல், உடல் வெப்பமிகுத்தல், உமிழ்நீர் பெருக்கல், உடலுரமாக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.

1. தூய்மையான ஓமத்தை வறுத்துப் பொடித்து ஒரு கிராம் அளவுக்கு நீருடன் கொள்ளப் பசியைத் தூண்டும். வயிற்று வாயு தீரும்.

2. ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களிபோலக் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப் போடக் குணமாகும்.

3. ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து இடித்துப் பொடித்து, அத்துடன் சமஅளவு சர்க்கரைப் பொடி சேர்த்து, அரைத்த தேக்கரண்டியாகக் காலை, மாலை கொடுத்துவரச் செரியாமை, கடும் வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

4. ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை, கசகசாத் தொல் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி வடித்து 15 மி.லி.யாகக் காலை, மாலை கொடுத்து வர இரைப்பிருமலில் நெஞ்சுச் சளி கரையும்.

Friday, November 4, 2011

37. தினம் ஒரு மூலிகை (ஏலம்)

( தாவரவியல் பெயர் : Elettaria cardamomum Maton )

தொண்டை வாய் கவுள் தாலு குதங்களில்
தோன்றும் நோய் அதிசாரம் பன் மேகத்தால்
உண்டைபோல் எழும் கட்டி கிரிச்சரம்
உழலை வாந்தி சிலந்தி விஷசுரம்
பண்டை வெக்கை விதாக நோய் காசமும்
பாழும் சோமப்பிணி விந்து நட்டம் உள்
அண்டை ஈளை வன்பித்தம் இவைகலாம்
லமாம் கமழ் ஏலமருந்தே.


மலைப்பாங்கான இடங்களில் விளையும் ஒரு மணப் பொருள். உலர்ந்த காய்கள் நாட்டு மருந்துக் கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பசித்தூண்டியாகவும், வயிற்று வாயுவகற்றியாகவும் உடல் வெப்பம் மிகுப்பானகவும் செயல்படும்.

1. ஐந்து ஏலக்காயை நசுக்கி 200 மி.லி. பாலில் போட்டு, 200மி.லி. தண்ணீர் சேர்த்து சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை கலந்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிடப் பித்த மயக்கம் தீரும்.

2. ஏலரிசி, சீரகம், சுக்கு, கிராம்பு சமஅளவு எடுத்துப் பொடியாக்கி இரண்டு கிராம் வீதம் தேனில், ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை ஆகியவை குணமாகும்.

3. ஏலக்காயை உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு மூன்று வேளை சாப்பிட்டு வர தொண்டை, வாய், கீழ்வாய், இவைகளில் உண்டாகும் நோய்களையும் இருமல், கழிச்சல், நீர்ச்சுருக்கு, நெஞ்சின் கோழைக் கட்டு, சிலந்தி நஞ்சு இவற்றைப் போக்கும். பித்தத்தை ஆற்றும். பசித்தீயை உண்டாக்கும். விந்துவைப் பெருக்கும்.





Thursday, November 3, 2011

36. தினம் ஒரு மூலிகை. எள்


36. எள்
( தாவரவியல் பெயர் : Sesamum orientale )

மெல்லியதாக உடைந்த இலைகளையும், வெண்மையான தனித்த மலர்களையும், நான்கு பட்டையான காய்களையும், பழுப்பு நிற அல்லது சிறிய எண்ணெய்ச் சத்துள்ள விதைகளையும் உடைய சிறு செடியினம்.

இலைகள் எரிச்சல் தணிக்கும். விதை சிறு நீர் பெருக்கும். மாதவிலக்குத் தூண்டும், மலமிளக்கும், தாய்ப்பால் அதிகரிக்கும், உடலுரமாக்கும்.

1. இலையை அரைத்துக் கட்டிகளுக்குப் பற்றிட விரைவில் ஆறும்.

2. இலைக் கொத்தை நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாகத் தடித்து காணப்படும். இதனைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு ஆகியவை தீரும். பெரியவர்களுக்கு நீர்க்கோவை, சிறுநீர்ப்பை அழற்சி, சொட்டு நீர் ( சொட்டு சொட்டாக சிறுநீர் போதல் ) ஆகியவை தீரும்.

3. 5 கிராம் எள் பொடியை வெண்ணையுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.

4. எள்ளை அரைத்துக் களிபோலக் கிளறி இளஞ்சூட்டில் கட்டிகளின் மீது பூசி வர பழுத்து உடையும்.

5. ஒரு கிராம் எள் பொடியை நாள்தோறும் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வர மாதவிலக்குப் பிரச்சினைகள் நீங்கும்.