Sunday, August 28, 2011

தினம் ஒரு மூலிகை ( அசோகு)


4. அசோகு

(தாவரவியல் பெயர்: Saraca indica)

நீண்ட கூட்டிளைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டின் முன்புறங்களில் வளர்க்கப் படுவதுண்டு.

பட்டை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சதை, நரம்பு ஆகியவற்றின் வீக்கம் அகற்றியாகவும், கருப்பைக் குற்றங்ககளை நீக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 100 கிராம் மரப்பட்டையை இடித்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி ஆகும்வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு, வெட்டை, மூலம், கட்டிகள், வயிற்றுக்கடுப்பு நோய்கள் தீரும்.

2. மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாக இடித்து ஒரு

நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி அளவாக 3,4 வேளை தினமும் சாப்பிட்டுவர 1 வாரத்தில் எவ்வளவு நாளான பெரும்பாடும் தீரும். காரம், புளி சேர்க்கக் கூடாது.

3. அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை பாலில் சாப்பிட வயிற்றுப்போக்கு, இரத்தபேதி தீரும்.

4. அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு( தோல்) சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை காலை, மாலையாக் வெந்நீரில் சாப்பிடக் கருச்சிதைவு, வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும். 100, 120 நாட்கள் சாப்பிட பெண் மலடு தீரும்.

தினம் ஒரு மூலிகை ( அக்கரகாரம் )


3. அக்கரகாரம்

(தாவரவியல் பெயர்: Anacyclus pyrethrum)

அக்கரகாரம் அதன் பேர் உரைத்தக்கால்
உக்கிராக அத்தோடம் ஓடுங்கான் ஐ முக்கியமாய்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே தாகசுரம்
கண்டகல் பயந்தோடுங்காண்.

மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம்.இதன் வேர் மருத்துவப் பயனுடையது. தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல்தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

1. ஒருதுண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, தொண்டைக்கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250மி. லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வர பல்வலி நீங்கி பல்லாட்டம் குறையும். வாய் மற்றும் தொண்டைப் புண்கள் ஆறும்.

தினம் ஒரு மூலிகை ( அகத்தி )

2. அகத்தி

(தாவரவியல் பெயர்

: Sesbania grandiflora)

"வருந்த சகத்திலெழு பித்தமதி சாந்தியாம்

மருந்திடுதல் போம் வன்கிரந்தி வாய்

வெந்திருந்த சனம் செரிக்கும்

நாளும் அகத்தி இலை திண்ணுபவர்க்கு

வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென் மரவகை. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமையலுக்கும், இல்லை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. கீரையை வாரம் ஒருமுறை வெயிலால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ பருகுவதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்துவர சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

3. அகத்தித் தைலம் வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.


Friday, August 26, 2011

தினம் ஒரு மூலிகை ( அருகம்புல் )


1. அருகம்புல்

(தாவரவியல் பெயர்: Cynodon dactylon)

அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை

சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்

கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்

உண்ணோ யொழிக்கு முரை

குறுகிய நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய ஒரு புல் வகை. ஆனைமுகக் கடவுளுக்குப் பூசனை மூலிகையாகப் பயன்படுவது.

தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயல்படும்.

1. கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் காத்து, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாதவிலக்குச் சிக்கல் நீங்கும்.

2. கணு நீக்கிய அருகம்புல் சமூலம் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முகம் வசீகரமாகும்.

3. அருகம்புல் சமூலம் 30 கிராம், கீழா நெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை விழுதாய் அரைத்துத் தயிரில் கலக்கி காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர்த் திரையில் உள்ள புண்ணால் நீர்க்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

4. அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.

5. வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச் சொறி, சிரங்கு, தோல் நோய், வேர்க்குரு, தேமல், சேற்றுப் புண், அரிப்பு, வேனல் கட்டி ஆகியவை குணமடையும்.

6. அருகம்புல் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு: கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்).

7. அருகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம் இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாட்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

8. 1கிலோ அருகம்வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு 1 லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து 1லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்குராக் கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறு தீயில் பதமுறக்காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சு வலி, வயிற்று எரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைச் சூடு, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.

9. அருகம்வேர், நன்னாரி வேர், ஆவாரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம், 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லியாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

Sunday, August 21, 2011

கற்பக மூலிகை...

கடந்த பதிவில் கூறியது போல நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, சோளம், பயறுவகைகள், கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களில் மா, பலா, வாழை, நெல்லிக்கனி, நாவற்பழம், எலுமிச்சை போன்றவைகளை அதிக அளவிலும், அரிசி உணவு வகைகளைக் குறைவாகவுமே பயன்படுத்தினர். அப்படிப்பயன் படுத்தியதால் உடலுக்குத் தேவையானச் சத்துக்கள் சரிவிகித சமஅளவில் கிடைத்தது. நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர்...

ஆனால் இன்றோ நாம் கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றின் பயன் தெரிந்தும் பயன்படுத்தத் தெரியாததால் அவற்றை நாம் ஒதுக்கி விடுகிறோம். மேலும் இவையனைத்தும் இன்று நம் உபயோகத்திற்கு ஏதுவாக மாவாகவும், குருணையாகவும் எளிதில் கிடைக்கிறது.

பயறுவகைகளான நிலக்கடலை, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, கொள்ளு, மொச்சை, காராமணி, உளுந்து, எள் மற்றும் பருப்புவகைகள் ஆகியவற்றையும் கீரையில் அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மணித்தக்காளி, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தூதுவளைக்கீரை மற்றும் காய்கறிகளில் சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவையே முக்கியப்பங்கு வகித்தது.....

முதற்பகுதியில் சொன்ன ஏழு வகையான சத்துக்களும் இவற்றில் அடங்குகிறது.
இப்படி சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்ட மூலிகைகளில்
முதலாவதாக திருமூலரின் 45 கற்பக மூலிகைகளைப் பார்ப்போம். பிறகு ஒவ்வொரு மூலிகைகளையும் அதன் மருத்துவ குணங்களோடு வரும் பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம்.

· கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
· காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
· கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
· ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
· "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தக ற்றாழை 19 செஞ்சித்திர மூலம்
· நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
· பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
· 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
· "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
· கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
· கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அழுகண்ணி
கெடியான 37 பொன்னூமத்தை 38 மதுர கோவை
· படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
· "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
· 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
· பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
· துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
· "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
· மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
· எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
· அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளபவர்களிற்கு மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும், முடி நரைக்காது, தோல் சுருங்காது, உடல் மூப்பு அடையாது மலைகளில் எளிதாக ஏறலாம். மூச்சு இரைக்காது.

Saturday, August 20, 2011

இயற்கையை மீறுவதால்....


இயற்கை விவசாய முறையையும், இயற்கை உரங்களையும் பயன்படுத்த தவறிவிட்ட நாம் விவசாய புரட்சி என்று சொல்லி மரபணு மாற்றம் செய்யப்பட்ட BT கத்தரிக்காய் ஏற்படுத்திய ஒவ்வாமை (அலர்ஜி ) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளையும், இரசாயன உரங்களையும் பயன்படுத்தி நம் உண்ணும உணவுகளில் நமக்குத் தெரியாமலேயே நச்சுத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டோம். இதன் பக்க விளைவுதான் மலட்டுத்தன்மை, புற்று நோய், உடல்பருமன், சிறுவயதில் பெண்குழந்தைகள் பூப்பெய்துதல் போன்ற உடல் கோளாறுகளை நாம் காண முடிகிறது...(இந்த இயற்கை விவசாயத்திற்கும், உரங்களுக்கும் ஆதரவாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களும், பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களும் இன்னும் பலரும் எடுத்து வரும் முயற்சி தமிழகத்தில் இயற்கை விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என் நாமும் வாழ்த்துவோம்.)

கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், இன்னும் பழங்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்காக உபயோகிக்கப்படும் இரசாயன கல் (கார்பைடு), காய்கறிகளுக்கு குறிப்பாக முட்டைகோசு, பூகோசு,கத்தரிக்காய் செடிகளுக்கு பாஸ்பேட் போன்ற செயற்கை இரசாயனங்களை சேர்ப்பதாலும், மாடுகளின் கறவையை அதிகப் படுத்துவதற்க்காகவும், கறிக்கோழிகளின் (பிராய்லர்) குறுகிய கால வளர்ச்சிக்கும்உபயோகிக்கப்படும் ஊசிகளும் நம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை...
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள், புட்டிகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவையும் நமக்கேற்படும் உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணிகளாகும். (உதாரணமாக எண்ணையில் பொரித்த பைகளில் அடைக்கப்பட்ட குர்குரேயை எரித்துப் பார்த்தோமானால் ஒருவித பிளாஸ்டிக் துர்நாற்றம் வரும். மேலும் ஒரு குர்குரே எரியும்போதே குறைந்தது இரண்டிலிருந்து மூன்று சொட்டு எண்ணை வெளிவரும்.)ஒரு குர்குரேவிற்கே இப்படியென்றால்.....ஒரு முழு பாக்கெட் குழந்தைகளின் வயிற்றுக்குள் போனால்....

இப்படி உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடிய உணவு முறைகளை சிறிது மாற்றி இயற்கையின் கொடையான நிகரற்ற நற்குணம் வாய்ந்த மூலிகை கீரைகளைச்
சமைத்தும்,துவையலாகவும்,பொடியாகவும் உணவில் கலந்து சாப்பிடுவதன் மூலம், சித்த மருத்துவம் உணவு மருத்துவமாக மாறுகிறது.மேலும் நமது அன்றாட வாழ்வில் அறுசுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு இவைகளைச் சமஅளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமன் செய்து நோயின்றி வாழ முடியும். ஏனெனில் இவற்றில் ஏதேனும் ஒன்று மிகினும் குறையினும் நோய் வரும் என்பது சித்தர்களின் சித்தாந்தம். இதனை சான்றோர்கள் சித்த மருத்துவம் பெண்களின் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் அடங்கும் எனக் கூறுவர். இதனையே வள்ளுவர் உண்ட உணவு நன்றாகச் சீரணித்த பின் அடுத்த வேளை உணவு உண்ண வேண்டும் என்று பின்வரும் திருக்குறள் வழியாக உணர்த்துகிறார்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
மேலும் நோய் வந்த பின் சிகிச்சைப் பெறுவதை விட, நோய் வருமுன் காப்பதே சிறந்ததாகும் என்பதனை
நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். - என்று கூறுகிறார்.
இப்படி மருந்தாகும் மூலிகை உணவுகளை மறந்து அன்னிய உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறி அதனால் புதிய புதிய நோய்களை அன்பளிப்பாகப் பெற்று அல்லலுறுகிறோம். இனிவரும் நாட்களில் நம் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறி நோயில்லாத சமுதாயம் செய்வோம்.