Wednesday, October 5, 2011

31. தினம் ஒரு மூலிகை ஊசித்தகரை

31. ஊசித்தகரை
( தாவரவியல் பெயர் : Cassia tora )

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் நீண்ட மெல்லிய காய்களையும் உடைய சிறு செடி. இலை வெகுட்டல் மணமுடையது. இதன் இலை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது.

உடல் வெப்பகற்றுதல், நுண்புழுக் கொல்லுதல், மலமிளக்குதல் ஆகியவை இதன் செய்கையாகும்.

1. 50 கிராம் இலையைக் குறுக அரிந்து ஒரு லிட்டர் நீரிலிட்டு 125 மி.லி. ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 - 15 மி.லி. வீதம் காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குப் பல் முளைக்கும்போது ஏற்படும் காய்ச்சல் தீரும்.

2. இலையை நீர்விட்டு மென்மையாக அரைத்துக் களிபோல அனலில் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப் போட கட்டி, பிடிப்பு, வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஊசித்தகரை வேரை எலுமிச்சம் பழச்சாற்றில் இழைத்துத் தடவ தேமல், படை ஆகியவை குணமாகும்.

4. இலைச் சாற்றுடன் சமளவு விளக்கெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி புண்களில் தடவி வரக் குணமாகும்.

5. விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவப் படை, சிரங்கு, ஆறாத புண் ஆகியவை தீரும்.

6. விதையை இலைக்கள்ளிச் சாற்றில் ஊறவைத்துக் கோநீரில் அரைத்துப் பூசிவர தொழுநோய்ப் புண், புரையோடிய புண்கள், படர்தாமரை, கட்டிகள் ஆகியவை குணமாகும்.


1 comment: