Monday, October 3, 2011

26. தினம் ஒரு மூலிகை ( இலுப்பை )


(தாவரவியல் பெயர் : Madhuca longifolia )

புண்ணும் புரையும் அறும் போதத் துவர்ப்பாகும்
எண்ணும் அகக்கடுப்பிருகமோ _ பெண்ணே கேள்
நீரிழிவு ஏகும் நெடுமோனம் மூலத்தால்
போரடர் கடுப்பு இரத்தம் போம்.

கிளை நுனியில் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்துக் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், முட்டை வடிவச் சத்தைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப் பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். இருப்பை என்றும் ஓமை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும். சதை நரம்புகளை சுருங்கச் செய்யும். காமம் பெருக்கும். தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும். பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும்.

1. இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.

2. இலுப்பைப் பூ 50 கிராம் எடுத்து அரைலிட்டர் நீரிலிட்டு 20 மி.லி.யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மட்டும் இரண்டு மாதங்கள் சாப்பிட மதுமேகம் குணமாகும்.

3. 10 கிராம் 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும். காய்ச்சல், தாகம் குறையும்.

4. பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

5. இலுப்பை எண்ணெயை இளஞ்சூடாக்கி தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

6. 10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்க வாந்தியாகி நஞ்சுப் பொருள் வெளியாகும்.

7. பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரம் பட்டை எல்லாம் சம அளவு எடுத்துக் கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்கு வரும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றுக்குத் தடவ விரைவில் ஆறும்.

8. பிண்ணாக்கு அரைத்து அனலில் வைத்துக் களியாக்கி இளஞ்சூட்டில் விரை வீக்கத்திற்குக் கட்ட குணமாகும். 4,5 முறைகளில் தீரும்.






No comments:

Post a Comment