Saturday, October 22, 2011

35. தினம் ஒரு மூலிகை எழுத்தாணிப் பூண்டு

35. எழுத்தாணிப் பூண்டு
(தாவரவியல் பெயர் : Launaea sarmentosa )

பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும் எழுத்தாணி போன்ற உருண்ட தண்டுகளில் நீல, மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி. வயல் வரப்புகளில் தானே வளர்வது.

இதற்கு முத்தெருக்கன் செவி என்றொரு பெயரும் உண்டு. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது.

1. 5 முதல் 10 கிராம் இலைகளை நன்கு அரைத்துக் காலை மாலை கொடுத்து வரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீத பேதி குணமாகும்.

2. இலைச் சாற்றுடன் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி சொறி, சிரங்குக்குப் பூச குணமாகும்.

3. 5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை குடித்துவர மார்பகம் வளர்ச்சி அடையும். கரப்பான், பரு, பிளவை ஆகியவை தீரும்.





34. தினம் ஒரு மூலிகை எலுமிச்சை

34. எலுமிச்சை
(தாவரவியல் பெயர் : Citrus Medica )

தாகங் குகைநோய் தாழா சிலிபதநோய்
வேகம் கொள் உன்மாதம் வீறுபித்தம் _மா கண்ணோய்
கன்னநோய் வாந்திபோம் கட்டுவாதித் தொழிலில்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து,”


முள்ளுள்ள சிறு மரம். இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

உடல் சூடு தணிக்கவும், பசித் தூண்டியாகவும் பயன்படும்.

1. இலையை மோரில் ஊறவைத்து, மோரை உணவில் பயன்படுத்தப் பித்தச்சூடு, வெட்டிச் சூடு தணியும்.

2. பழச்சாறு நான்கு துளிகள் காதில் விட்டுவர காது வலி நீங்கும்.

3. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் ஒன்றரை லிட்டர் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

4. பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்துப் பின் காய வைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்தமயக்கம், குமட்டல், பித்தவாந்தி, சுவையின்மை, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

5. நகச் சுற்றுக்கு விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.


33. தினம் ஒரு மூலிகை எலிக்காதிலை



ஏறத்தாழ இதய வடிவ மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி. இலையே மருத்துவப் பயனுடையது.

சிறுநீரைப் பெருக்கித் தாதுக் கொதிப்பைத் தணிக்கும் குணமுடையது.

1. ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக அரிந்து போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மி.லி. யாகக் நாளைக்கு மூன்று வேளை, மூன்று நாட்களுக்கு சாப்பிட மேகச் சுரம், தாகம், நீரிழிவு, நீர்க் கடுப்பு, மூர்ச்சை, வலி ஆகியவை தீரும்.

2. உடம்பில் முள், ஊசி ஏதும் குத்தி வெளிப்படாமல் இருந்தால் அவ்விடத்தில் இலையை அரைத்துக் கட்ட வெளிப்படும்.

3. எலிக் காதிலையை அரைத்து வெட்டுக் காயத்தில் வைத்துக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.



Sunday, October 9, 2011

32. தினம் ஒரு மூலிகை எருக்கு


எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத்
திருக்கறவே கொன்றுவிடும் தீர _ செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது.

அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடிகள். செடி முழுதும் மென்மையான வெள்ளைக் கம்பளியால் மூடியது போலிருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக் கூடியவை. இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறந்தது.

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை உடையது.

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

குறிப்பு : எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் முறிப்பாகும்.




Wednesday, October 5, 2011

31. தினம் ஒரு மூலிகை ஊசித்தகரை

31. ஊசித்தகரை
( தாவரவியல் பெயர் : Cassia tora )

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் நீண்ட மெல்லிய காய்களையும் உடைய சிறு செடி. இலை வெகுட்டல் மணமுடையது. இதன் இலை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது.

உடல் வெப்பகற்றுதல், நுண்புழுக் கொல்லுதல், மலமிளக்குதல் ஆகியவை இதன் செய்கையாகும்.

1. 50 கிராம் இலையைக் குறுக அரிந்து ஒரு லிட்டர் நீரிலிட்டு 125 மி.லி. ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 - 15 மி.லி. வீதம் காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குப் பல் முளைக்கும்போது ஏற்படும் காய்ச்சல் தீரும்.

2. இலையை நீர்விட்டு மென்மையாக அரைத்துக் களிபோல அனலில் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப் போட கட்டி, பிடிப்பு, வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஊசித்தகரை வேரை எலுமிச்சம் பழச்சாற்றில் இழைத்துத் தடவ தேமல், படை ஆகியவை குணமாகும்.

4. இலைச் சாற்றுடன் சமளவு விளக்கெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி புண்களில் தடவி வரக் குணமாகும்.

5. விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவப் படை, சிரங்கு, ஆறாத புண் ஆகியவை தீரும்.

6. விதையை இலைக்கள்ளிச் சாற்றில் ஊறவைத்துக் கோநீரில் அரைத்துப் பூசிவர தொழுநோய்ப் புண், புரையோடிய புண்கள், படர்தாமரை, கட்டிகள் ஆகியவை குணமாகும்.


30. தினம் ஒரு மூலிகை உதிரமரம்


30. உதிரமரம்
( தாவரவியல் பெயர் : Lannea coromandelica )


சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இலையுதிர் காலங்களில் இலைகளே இல்லாமல் பூ அல்லது காய்கள் மட்டுமே நிறைந்து காணப்படும். ஒதியமரம என்றும் வழங்கப் பெறும். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

தாது பலம் கொடுக்கவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், இரத்தக் கசிவை நிறுத்தவும், உடல் தாதுக்கள் அழுகுவதைத் தடுக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.

1. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களுக்கு கட்ட கரைந்து விடும்.

2. இலையை அரைத்துப் பற்றிட எவ்விதப் புண் புரைகளும் தீரும். ஒதியம் பட்டையை நீரிளிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் ஆறாத புண்கள், ஆசன வாயில் காணும் புண்கள், பிறப்புறுப்பில் உள்ள ரணங்கள் ஆகியவற்றைக் கழுவி வரக் குணமாகும். வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் இரத்தம், சீழ் கசிதல் குணமாகும். 25 மி.லி. ஆகக் குடித்து வர அக உறுப்புகளில் உள்ள புண்கள், பெரும்பாடு, இரத்த மூலம் ஆகியவை குணமாகும்.

3. 20 கிராம் பட்டையுடன் 5 கிராம் மஞ்சள் சேர்த்து மையாக அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிட மூலக் கடுப்பு, இரத்த பேதி, நீர்த்த பேதி, தாகம், மயக்கம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

4. ஒதியம் பிசின் 100 கிராம் போடி செய்து அத்துடன் 5 கிராம் கிராம்புப் போடி கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப் பொடியைத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வர இரைப்பிருமல் தீரும்.








29. தினம் ஒரு மூலிகை (உசிலமரம்)

29. உசிலமரம்
( தாவரவியல் பெயர் : Albizia amara Roxb )

சமமான இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளையும், பூக்களின் கற்றையான மகரந்தத் தாள்களையும் தட்டையான காய்களையும் வட்டமான விதைகளையும் மிகவும் உறுதியான கட்டைகளையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. இலைப் பொடியை எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும்.

2. உசிலைப் பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மி.லி. யாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 1,2 தேக்கரண்டி ஒரு நாளைக்கு மூன்று வேலையாகக் கொடுக்க குழந்தைகளுக்கு வரும் அள்ளு மாந்தம், சுழிக் கணை ஆகியவை குணமாகும்.







Tuesday, October 4, 2011

28. தினம் ஒரு மூலிகை ஈழத்தலரி


( தாவரவியல் பெயர் : Plumeria rubra )

நீண்ட தடித்த இலைகளையும் நறுமணமுள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறமுள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலையுதிர் மரம். இதன் எல்லாப் பாகமும் மருத்துவப் பயனுடையது.

1. பட்டையை மென்மையாக அரைத்துக் கடினமான கட்டிகளுக்குப் பற்றிட கட்டி உடைந்து ஆறும்.

2. மலர் அல்லது மொட்டுகளை வெற்றிலையுடன் மென்று தின்ன மண்டைப் பரு குணமாகும்.

3. வேர்ப் பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டிய குடிநீர் 50 மி.லி. காலையில் மட்டும் பருகிவரப் பாலியல் நோய்ப் புண்கள், சீழ்கலந்து வெளியேறும் சிறுநீர், சிறுநீர்ப் பாதை அழற்சி ஆகியவை குணமாகும்.

4. மரத்தின் பாலினை மூட்டு வலியுள்ள இடங்களில் தடவிவரக் குணப்படும்.




Monday, October 3, 2011

26. தினம் ஒரு மூலிகை ( இலுப்பை )


(தாவரவியல் பெயர் : Madhuca longifolia )

புண்ணும் புரையும் அறும் போதத் துவர்ப்பாகும்
எண்ணும் அகக்கடுப்பிருகமோ _ பெண்ணே கேள்
நீரிழிவு ஏகும் நெடுமோனம் மூலத்தால்
போரடர் கடுப்பு இரத்தம் போம்.

கிளை நுனியில் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்துக் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், முட்டை வடிவச் சத்தைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப் பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். இருப்பை என்றும் ஓமை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும். சதை நரம்புகளை சுருங்கச் செய்யும். காமம் பெருக்கும். தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும். பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும்.

1. இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.

2. இலுப்பைப் பூ 50 கிராம் எடுத்து அரைலிட்டர் நீரிலிட்டு 20 மி.லி.யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மட்டும் இரண்டு மாதங்கள் சாப்பிட மதுமேகம் குணமாகும்.

3. 10 கிராம் 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும். காய்ச்சல், தாகம் குறையும்.

4. பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

5. இலுப்பை எண்ணெயை இளஞ்சூடாக்கி தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

6. 10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்க வாந்தியாகி நஞ்சுப் பொருள் வெளியாகும்.

7. பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரம் பட்டை எல்லாம் சம அளவு எடுத்துக் கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்கு வரும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றுக்குத் தடவ விரைவில் ஆறும்.

8. பிண்ணாக்கு அரைத்து அனலில் வைத்துக் களியாக்கி இளஞ்சூட்டில் விரை வீக்கத்திற்குக் கட்ட குணமாகும். 4,5 முறைகளில் தீரும்.






Sunday, October 2, 2011

25. தினம் ஒரு மூலிகை - இலந்தை

25. இலந்தை
(தாவரவியல் பெயர் : Ziziphus mauritiana lamk )

" பித்தம் மயக்கம் ருசி பேராப் பெரும் வாந்தி
மொத்த நிலம் எல்லாம் முடிந்திடுங்காண் மெத்த
உலர்ந்த வெறும் வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை நறுங்கனியை எண்.

வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறுமரம். புளிப்புச் சுவையுடைய உண்ணக கூடிய பழங்களை உடையது. இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், வேர், பட்டை பசி தூண்டியாகவும், பழம் சளியகற்றி, மலமிளக்கி, பசித் தீயை அதிகப் படுத்தவும் பயன்படுகிறது.

1. இலை ஒரு பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 எல்லாம் சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் கோளாறுகள் நீங்கிக் குழந்தைப் பேறு கிட்டும்.

2. இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம்பட்டை 40 கிராம் எடுத்து நன்கு இடித்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 125மி.லி.யாக்கி தினமும் நான்கு வேளை குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு தீரும்.

3. இலந்தை வேர்ப்பட்டைச் சூரணம் நான்கு சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

4. துளிர் இலை அல்லது பட்டையை 5 கிராம் அளவு எடுத்து நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலை கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்த பேதி தீரும்.