Saturday, September 17, 2011

தினம் ஒரு மூலிகை (ஆடுதின்னாப் பாளை)


16. ஆடுதின்னாப் பாளை

(தாவரவியல் பெயர் : Aristolochia bracteolata)

"ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு"

மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறுகால வலியை அதிகமாக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.

2. இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக்கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.

3. வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியம் இருக்க (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல், 24 மணிநேரம் தூங்க விடக்கூடாது) மூன்று நாட்களில் எல்லாவிதப் பாம்பு நஞ்சும் தீரும்.

4. வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை நீங்கி சுகப்பேறு ஆகும்.

5. விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.

ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.

இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.

Wednesday, September 14, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆடாதொடை )

15. ஆடாதொடை

(தாவரவியல் பெயர் : Adhatoda vasica )


ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்

கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்-நாடின

மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கும்

அகத்துநோய் போக்கு மறி

நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயல் படும்.

1. இலைச்சாறும் தேனும் சம அளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

2. இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

3. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாட்கள் பருகி வர என்புருக்கிக் காசம் (T.B.) இரத்த காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவை தீரும்.

4. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமஅளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணமாகும்.

5. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.

6. உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.

7. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் போன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு ) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாகநீண்ட நாட்கள் கொடுத்து வர காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல். நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை பெறும்.

8 ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர எவ்விதச் சுரமும் நீங்கும். இது அஷ்ட மூலக் கஷாயம் எனப்படும்.

9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.

தினம் ஒரு மூலிகை ( அறுவதா )


14. அறுவதா

(தாவரவியல் பெயர் : Ruta graveolens)

மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை எனவும் வழங்கப் பெறும். இதன் இலையே மருத்துவப் பயனுள்ளதாகும். வலி போக்குதல்,வெப்பமுண்டாக்கல், கோழையகற்றுதல் மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களை உடையது.

1. இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.

2. இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வர, சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.

3. இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப 1/4 முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் சாப்பிட வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச் சளி, பால் மாந்தம், வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

4. உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாக சுவாசிக்க இருமல் தணியும்.

தினம் ஒரு மூலிகை ( அழிஞ்சில் )

13. அழிஞ்சில்

(தாவரவியல் பெயர் : Alangium salviifolium )

நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. வேர்ப்பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

வாதநோய் நீக்கி உடல் தேற்றுதல், வாந்தி உண்டு பண்ணுதல்,பித்த நீர்ச்சுரப்பை மிகுத்தல், மலமிளக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல், காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது. அழிஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேல் கொடுத்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடவேண்டும்.

1. வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை ஒரு வாரம் கொடுத்து வரக கடி விஷங்கள், தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

2. இலையை அரைத்து ஒரு கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

3. சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராம், கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சம அளவு கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் சாப்பிட்டு வரத் தொழு நோய் குணமாகும்.

4. அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் படும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல்நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.